தமிழக அமைச்சரவை கூட்டம்? முக்கிய ஆலோசனை?

சென்னை தலைமை செயலகத்தில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்: சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து முக்கிய ஆலோசனை

சென்னை: தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் பிப்ரவரி 2ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடராக இது அமைகிறது. மேலும், இந்த சட்டப்பேரவை கூட்டம் 4 நாள் நடைபெறும் என தெரிகிறது.

இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் நாளை மாலை 4.30 மணிக்கு கூடுகிறது. இக்கூட்டத்தில், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் புதிய சட்டமசோதாக்கள் குறித்தும், இன்னும் 2 மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் தொழில் நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் கவர்னருக்கு அனுப்பிவைக்கப்படும். இதேபோல், பிப்ரவரி மாத இறுதியில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை கணக்கில் கொண்டு இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

S.முஹமது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.