ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு விழாவில் முதலமைச்சர் சபதம்?
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் ஆட்சி அமைக்க வீர சபதம் ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி திறந்து வைத்தார். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும் சபாநாயகர் தனபால், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவின் நினைவிடம் அவரது சமாதியை மையமாக வைத்து சுமார் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 15 மீட்டர் உயரமும், 30.5 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும் கொண்டு, ரூபாய் 57.8 கோடி மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை போல காட்சி அளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக தலைவர் ஒருவருக்கு டிஜிட்டல் அருங்காட்சியகம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவருக்கு அமைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்துவைத்த முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி பேசியதாவது, அதிமுகவை அழியாத எஃகு கோட்டையாக அம்மா உருவாக்கியுள்ளார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும். அதுவே நாம் ஜெயலலிதாவிற்கு செய்யும் நன்றிக்கடன் ஆகும். வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை அமைக்க இதே நினைவிடத்தில் நாம் அனைவரும் நன்றி வீர சபதம் ஏற்போம் என்று தெரிவித்தார்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்