நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் -14

 நம்ம நாட்டு மருந்து…! (14)

எல்லா நோய்களுக்கும் அடிப்படையான காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே! இந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரியான முறையில் பராமரித்தால்,

நோயில்லா பெரும் வாழ்க்கை அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை!

நமது முன்னோர்கள் அதற்காகத்தான் வருமுன் காப்போம் என்கின்ற கொள்கையின் அடிப்படையில் உண்ணும் உணவிலேயே ஆரோக்கியத்திற்கான நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த மருத்துவ மூலிகை பொருட்களை உணவில் சேர்த்து வந்தார்கள்.

அப்படிப்பட்ட அருமையான மூலிகை உணவுப் பொருள்களை வைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் அஞ்சறைப் பெட்டி…!

இன்றைய நவநாகரீக வாழ்க்கை சூழலில் பொதுவாக அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகளில் சமையல் என்பது மிகப்பெரிய சவால் அல்லது அரிய விஷயமாகிவிட்டது.

இதன் காரணமாகவே அவர்களுக்கு அஞ்சறைப்பெட்டி என்றால் என்னவென்றே தெரியாது.

 ஏன் அங்கு வசிப்பவர்களில் பலருக்கு விறகு அடுப்பு என்பது ஒரு அபூர்வமான அருங்காட்சி பொருளாகிப் போனது.

அதற்குப் பின்னால் வந்த பம்பு ஸ்டவ் அதைப் பற்ற வைப்பதற்கு கூட இந்த காலத்து இளம் பெண்களுக்கு கண்டிப்பாக தெரிய வாய்ப்பே கிடையாது.

அடுத்து சமையல் எரிவாயு, அதையும் கடந்து மின்சார அடுப்புகள் தான் இப்போது அப்பார்ட்மெண்டில் முன்னணி வகிக்கிறது.

அதுவும் காபி, டீ,  பால் காய்ச்சுவதற்கு மற்றும் குளிப்பதற்கான சுடுநீர் போடுவதற்கு மட்டுமே…!

எனக்கு குக் (சமையல்) தெரியாது என்று சொல்லுவது இந்த காலத்து நாகரீகமான வார்த்தையாகிப் போனது.

போன் செய்தால் போதும் விதவிதமான உணவு பதார்த்தங்கள் அஜினாமோட்டா நறுமண சுவையுடன் நொடிப்பொழுதில் வீடு வந்து சேரும்.

அதே நொடியிலே நோய்களும் வந்து சேர்கிறது என்பதை இவர்கள் அறிந்தும் அறியாமல் இருப்பது தான் ஆச்சரியமான விடையங்களில் ஒன்று.

மருந்து, மாத்திரை, டாக்டர்களை நம்பும் அளவிற்கு, நமது பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களை இவர்கள் நம்ப மறுத்து வாழ்ந்து வந்தாலும்.

தற்போது மேலை நாட்டவர்கள் நமது தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

நமது உணவு உடல் ஆரோக்கியத்திற்கும் எல்லாவிதமான தட்பவெட்ப சூழலுக்கும் ஏற்றவாறும் நோய் எதிர்ப்பு திறனுடன், பருவகால மாற்றத்திற்கு ஏற்றவாறு நோயெதர்ப்புச சக்திகளையும் அதிகளவு தோற்றுவிக்கிறது என்கின்ற பகுப்பாய்வு அறிக்கையை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக நமது சமையலில் இடம்பெறும் ரசம் முக்கியமான ஆரோக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இந்த ரசத்திற்கு தேவையான அத்தனை மூலப் பொருட்களையும் உள்ளடக்கிய மருத்துவப் பெட்டிதான் நமது சமையலறையில் அலங்கரிக்கும் அஞ்சறைப்பெட்டி..!

அஞ்சறைப் பெட்டி, தமிழகத்தில் சமயலறைகளில் காணப்படும் மிக முக்கியமான மருத்துவ பெட்டியாகும்…

சமைக்கும் போது தேவையான கடுகு, சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள், பெருங்காயம் போன்ற சில அத்தியாவசிய மளிகைப் பொருட்களை ஒரே இடத்தில் வைப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது.

 கோயம்புத்தூர் வட்டாரமொழி வழக்கில் இது செலவுப் பெட்டி என அழைக்கப்படுகிறது.

அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு மூலிகை பொருட்களும் அதி அற்புதமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

அதைப் பற்றி சற்று விரிவாக பார்க்க வேண்டிய நேரம் இது அதாவது “மறு நினைவூட்டல் பதிவு” என்றால் சிறப்பாக இருக்கும்.

அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் கடுகு வெறும் ரசத்திற்கு மட்டுமல்ல சைவ-அசைவ குழம்புகள் மற்றும் சாம்பார், பொரியல், கூட்டு, அவியல், சட்டினி வகைகள், போன்றவற்றை என்று சமைக்கும் அத்தனை உணவு பதார்த்தங்களிலும் தாளிதம் செய்யும் போது கடுகு தான் முக்கியத்துவமும் முன்னணியும் பெற்று உள்ளது.

அதன் கூடவே கருவேப்பில்லை

 எனும் அருமருந்து இலையும் கூட்டணி சேர்ந்து உள்ளது.

(கருவேப்பிலையின் அருமை பெருமைகளை தனியாக பார்க்கலாம்)

எண்ணிலடங்கா மருத்துவ குணம் கொண்ட கடுகை….  “கடுகு சிறுத்தாலும் காலம் கெட்டுப் போகாது” என்பது நமது முன்னோர்களின் வழக்கு மொழி..!

அப்படிப்பட்ட கடுகின் மருத்துவ குணத்தை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம்..!

 எதையும் வருமுன் காப்போம்..!

 நல்ல (உணவு) மருந்து…!

 நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

 தொகுப்பு:- சங்கரமூர்த்தி…. 7373141119