கல்வி மருத்துவ உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்!

திமுக தலைவரும், கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் தனது தொகுதி மக்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவித் தொகை, மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார்.

கொளத்தூர் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு நேற்று நேரில் சென்ற ஸ்டாலின், சீனிவாசா நகர் 3-வது தெருவில் திறந்தவெளி நிலத்தில் சிறுவர் பூங்கா, உடற்பயிற்சிக் கருவிகள் அமைக்கும் பணி, சீனிவாசா நகர் 6-வது குறுக்கு தெரு, கன்னியம்மன் கோயில் குளம் மேம்படுத்தும் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர், சந்நதி தெருவில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் திட்டத்தின் கீழ், நடமாடும் மருத்துவ சேவை வழங்கும் நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

திரு.வி.க நகர் குடியிருப்பில் 2 குழந்தைகள் நலவாழ்வு மையம் மேம்படுத்தும் பணி, பல்லவன் சாலை ஆரம்ப சுகாதார மையத்தில் காசநோய் சிகிச்சைக்காக கூடுதல் அறைகள் அமைக்கும் பணி, நியாயவிலைக் கடை கட்டும் பணி, கனகர் தெரு சுந்தரராஜர் பெருமாள் கோயில் குளம் மேம்படுத்தும் பணி, ஜவஹர் நகர் 2-வது வட்ட சாலையில் குழந்தைகள் விளையாட்டுத் திடல் மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் 21 பேர், கல்லூரி மாணவர்கள் 23 பேருக்கு கல்வி உதவிகளை வழங்கினார். 8 பேருக்கு மடிக்கணினி, 16 பேருக்கு மருத்துவ உதவி,8 பேருக்கு திருமண உதவி, 12 பேருக்குதையல் இயந்திரம், 5 பேருக்கு மீன்பாடி வண்டி, 5 பேருக்கு 4 சக்கர தள்ளுவண்டி, ஒருவருக்கு மோட்டார் பொருத்திய இருசக்கர வாகனம், செயற்கை கால், தீ விபத்தால் வீடுகளில் பாதிப்பு ஏற்பட்ட 3 குடும்பங்களுக்கு உதவி என்று 106 பேருக்கு உதவிகளை ஸ்டாலின் வழங்கினார்.

S. முஹமது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்