விக்டோரியா மருத்துவமனை அறிக்கை! சசிகலாவின் நுரையீரலில் தொற்று?

ஐசியூவில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று இருப்பது தெரியவந்துள்ளது என விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு நேற்று மாலை ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் பொது வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, கொரோனா பரிசோதனையில், அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்தது.
இருப்பினும், அதிகாரப்பூர்வமாக மருத்துவமனை சார்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்யவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டி வந்தனர். சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட்டார்.

அப்போது, வீல் சேரில் வெளியே அழைத்து வரப்பட்ட சசிகலா, அங்கு திரண்டிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தார். இந்நிலையில், சசிகலா உடல்நிலை குறித்து விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஐசியூவில் இருக்கும் சசிகலாவுக்கு தைராய்டு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், சிகிச்சை பெறும் சசிகலாவின் நுரையீரலில் தீவிர தொற்று இருப்பது சி.டி.ஸ்கேனில் தெரியவந்துள்ளது. ஆக்சிஜன் அளவு சீராகி இருக்கிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார் என்று மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.