அதிமுகவில் சசிகலா இணைவதற்கு வாய்ப்பு இல்லை – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

புதுடெல்லி:

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைப்பது தவறு அல்ல. அதற்காகதான் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்கள். தேர்தல் அறிவிப்புக்கு பிறகுதான் அரசியல் பேசுவோம்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

கேள்வி:-சசிகலா வெளியே வரும்பட்சத்தில் அ.தி.மு.க.வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:- அதற்கான வாய்ப்பு கிடையாது. அவர் அ.தி.மு.க. கட்சியிலேயே இல்லை. அவர் அ.தி.மு.க.வில் சேர 100 சதவீதம் வாய்ப்பில்லை.

கேள்வி:- சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறுகிறார்களே?

பதில்:- பா.ஜனதாவில் அப்படி யார் சொன்னது என்பதை சொல்லுங்கள். அதற்கான பேச்சுவார்த்தையே கிடையாது. அ.தி.மு.க.வில் இதை தெளிவாக முடிவு செய்யப்பட்டு இன்றைக்கும் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.

இன்றைக்கு தமிழகத்தில் அவரிடம் இருந்த பெரும்பாலானோர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டனர். அவரிடம் சிலர் மட்டுமே உள்ளனர். புரட்சித்தலைவி அம்மா, சசிகலாவை பல காலம் நீக்கி வைத்து இருந்தார். அம்மா இறந்த பிறகுதான் அவருக்கு பதவி கொடுத்தார்கள். அம்மா உயிரோடு இருந்தபோது அவர் கட்சியிலேயே கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் ரஹ்மான்