தமிழக முதலமைச்சர் டெல்லி பயணம்!

ஜெயலலிதா நினைவிடப் பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வுசெய்தார். பிப்ரவரியில் நடைபெற உள்ள ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்காக, முதல்வர் பழனிசாமி வரும் 18-ம் தேதி டெல்லி செல்கிறார்.

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தற்போது ரூ.79.75 கோடி மதிப்பில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

அடுத்த மாதம் திறப்பு

அடுத்த ஒரு மாதத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என்று கடந்த 9-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

பிப்ரவரி 24-ம் தேதிஜெயலலிதா பிறந்தநாளுக்கு முன்பாகவே நினைவிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல்வர் ஆய்வு

இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், நினைவிடப் பணிகளை முதல்வர் பழனிசாமி நேற்று பிற்பகல் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், பொதுப்பணித் துறை செயலர் க.மணிவாசன், செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், இயக்குநர் தெ.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதற்கிடையில், ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைப்பதற்காக, முதல்வர் பழனிசாமி வரும் 18-ம்தேதி டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமரை சந்தித்து விழாவுக்கு அழைப்பு விடுப்பதுடன், தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை பிரதமரிடம் முதல்வர் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிதி குறித்து கோரிக்கை

இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம், சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்தும் பேசுவார்கள் என்று தெரிகிறது. டெல்லி பயணத்தின்போது சில மத்திய அமைச்சர்களையும் சந்திக்கும் முதல்வர் பழனிசாமி, தமிழகத்துக்கான திட்டங்கள், நிதி விடுவிப்பு குறித்து கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.