முதல்வர் வேட்பாளரை அறிவிக்கிறார் அமித்ஷா!

ஜனவரி 14-ம் தேதி முதல்வர் வேட்பாளரை அறிவிக்கிறார் அமித்ஷா!

தமிழக முதல்வர் வேட்பளர் குறித்து வரும் 14-ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக- பாஜக இடையே பிரச்னை உள்ள நிலையில் அமித்ஷா வருகிறார். தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24 -ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இதனால் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

இதனிடையே, தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் வரும் 14-ம் தேதி சென்னையில் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். அப்போது, தமிழக முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உடல் நலம் குன்றியுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கவும் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான நிலையில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக இருதரப்பினர் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை அரசியல் அரங்கில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.