ஓர் உலக அம்பா..

சென்னைப் பல்கலைக்கழகத்
தமிழ் இலக்கியத் துறையில்
இணைப் பேராசிரியராக இருந்தபோது, மாலை வேளைகளில் நாட்டுப்புறவியல்
சான்றிதழ் – பட்டய வகுப்புகள்
முழுப் பொறுப்பேற்று நடத்தும்
வாய்ப்பினைச் சிந்தனைச் செம்மல் முனைவர் ந. சஞ்சீவி
அவர்கள் என்னிடம் வழங்கி
னார்கள்.
அப்போது மூவர் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும்போது
பாடும் அம்பாப் பாடல்கள்
பற்றி ஆய்வு செய்தார்கள்
தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மீனவர்கள் பாடும்
அம்பாப் பாடல்களைச்
சேகரித்தோம். அது அம்பாப் பாட்டு என நூலாக வெளிவந்தது.

மீனவர்கள் பாடும் அம்பாப்
பாடல்கள் அமைப்பில்
உலக ஒருமைப்பாட்டைப் புகுத்தி
ஓருக அம்பா என்னும் நூலை
1980-களில் உருவாக்கம் செய்தேன்.
அதில் 7 தலைப்புகளில் பாடல்கள் இடம் பெற்றன.
அவற்றுள் ஒரு தலைப்பு
‘ சாதி வெறி சாய்ப்போம்’
என்பது. அதனைச்
சான்றோர்கள் பார்வைக்கு
வைக்கிறேன்.

  • கு. மோகனராசு

ஓர் உலக அம்பா

       சாதி வெறி சாய்ப்போம்! 

அம்பா :

ஆளுக்கொரு சாதியாச்சு!
– ஆஅ! ஏலேஎ!
அமைதியெலாம்
ஓடிப்போச்சு!
– ஆஅ! ஏலேஎ!

எதிர் அம்பா :

வேளைக்கொரு சாதியாச்சு!
– ஆஅ! ஏலேஎ!
வேதனையே மீதமாச்சு!
– ஆஅ! ஏலேஎ!

அம்பா :

நாளுமிந்த சாதிகளால்
– ஆஅ! ஏலேஎ!
நாம்புரண்டோம் வீதியெலாம்!
– ஆஅ! ஏலேஎ!

எதிர் அம்பா:

பாழுமிந்த சாதிகளால்
– ஆஅ! ஏலேஎ!
பகையானோம் ஊரெல்லாம்!
– ஆஅ! ஏலேஎ!

அம்பா :

ஊரெல்லாம் இரண்டாச்சே!
– ஆஅ! ஏலேஎ!
உயிர்குடிக்கும் சாதிகளால்!
– ஆஅ! ஏலேஎ!

எதிர் அம்பா :

பாரெல்லாம் பலவாச்சே!
– ஆஅ! ஏலேஎ!
பழிசேர்க்கும் சாதிகளால்!
– ஆஅ! ஏலேஎ!

அம்பா :

சாதிகளால் கெட்டழிந்த
– ஆஅ! ஏலேஎ!
சரித்திரத்தை மாற்றிடுவோம்!
– ஆஅ! ஏலேஎ!

எதிர் அம்பா:

சாதிகளால் மக்கள்படும்
– ஆஅ! ஏலேஎ! சஞ்சலத்தை ஓட்டிவைப்போம்!
– ஆஅ! ஏலேஎ!

அம்பா :

சாதிக்கொரு நீதிகூறும்
– ஆஅ! ஏலேஎ!
சண்டாளர் மாறவைப்போம்!
– ஆஅ! ஏலேஎ!

எதிர் அம்பா:

சாதிவைத்துச் சண்டைபோடும்
– ஆஅ! ஏலேஎ!
தறுதலைகள் மாறவைப்போம்!
– ஆஅ! ஏலேஎ!

அம்பா:

சாதிகளைக் கூறுகின்ற
– ஆஅ! ஏலேஎ!
சாத்திரத்தைத் தீயிடுவோம்!
– ஆஅ! ஏலேஎ!

எதிர் அம்பா:

சாதிகளைச் சொல்வோர்க்கு
– ஆஅ! ஏலேஎ!
சாட்டையடி வேட்டுவைப்போம்!
– ஆஅ! ஏலேஎ!

அம்பா :

பாதியிலே வந்தசாதி
– ஆஅ! ஏலேஎ!
பாடையிலே சேர்த்திடுவோம்!
– ஆஅ! ஏலேஎ!

எதிர் அம்பா:

நீதிகளைக் கொன்றசாதி
– ஆஅ! ஏலேஎ!
நெருங்காமல் பார்த்திடுவோம்!
– ஆஅ! ஏலேஎ!

அம்பா :

ஓதிடுவோம் உலகவர்க்கு
– ஆஅ! ஏலேஎ!
ஒருசாதி மனிதர்என்று!
– ஆஅ! ஏலேஎ!

எதிர் அம்பா:

சாதியில்லா உலகமைக்க
– ஆஅ! ஏலேஎ!
சகலருக்கும் ஓலைவைப்போம்!
– ஆஅ! ஏலேஎ!