எஸ்.ஏ. சந்திர சேகர் மீண்டும் அரசியல் கட்சி

இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகர் மீண்டும் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவிப்பு!

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் அரசியல் கட்சியைத் துவக்கவுள்ளதாகத் தெரிகிறது.

இந்த முறை மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தன்னுடைய பெயரிலேயே அந்தக் கட்சியைத் துவக்கவிருக்கிறார்.

சென்ற மாதம் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடிகர் விஜய்யின் பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர்

இதன் தலைவராக பத்மநாபன் என்பவரும், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகரும், பொருளாளராக விஜய்யின் அம்மா ஷோபாவும் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் செய்தி வெளியானதும் பதறியடித்து சில மணி நேரங்களிலேயே இதற்கு மறுப்புத் தெரிவித்த நடிகர் விஜய், தன் தந்தை துவக்கியிருக்கும் கட்சிக்கும், தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

இதையடுத்து விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரும், கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த பத்மபநான் என்பவரும் தாமாகவே அந்தக் கட்சியில் இருந்து விலகிவிட்டனர்.

இதற்கடுத்து ஏற்பட்ட சமரசப் பேச்சுவார்த்தையின் பின்பு அந்தக் கட்சியை பதிவு செய்தவதை தான் கைவிட்டுவிட்டதாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பகிரங்கமாக அறிவித்தார்.

ஆனால், அப்படி சொல்லி ஒரு மாதம்கூட இல்லாத சூழலில் மீண்டும் கட்சியைத் துவக்கும் வேலைகளில் மூழ்கிவிட்டார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த முறை அவர் தன்னுடைய பெயரிலேயே கட்சியைத் துவக்கியிருக்கிறார்.

இதற்காக விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிருப்தி நிர்வாகிகளை அரவணைத்து அவர்களை கட்சியின் உறுப்பினர்களாக மாற்றி கையொப்பம் வாங்கியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்சிக்கு ‘ அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி’ என்று பெயர் வைத்திருக்கிறாராம்.

வரும் பொங்கல் தினத்தன்று உதயமாக இருக்கும் இந்தப் புதிய கட்சியில் விஜய் மக்கள் மன்றத்தில் இருந்து விலக்கப்பட்ட, விலகிய முன்னாள் நிர்வாகிகளை இணைக்க முடிவு செய்திருக்கிறா் எஸ்.ஏ.சந்திரசேகர்

இதற்காக இது போன்று விஜய் மீது அதிருப்தியில் இருக்கும் அனைத்து மட்ட நிர்வாகிகளையும் இணைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் எஸ்.ஏ.சி.

அதற்காக இன்று காலை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்லது. இந்தக் கூட்டத்தில் நடந்த ஆலோசனைக்கு பிறகு தன் கட்சிக்கான 20 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களை எஸ்.ஏ.சந்திரசேகர் நியமித்துள்ளார்.

‘விஜய்யின் பெயரில் கட்சி இருந்தால்தானே அவர் எதிர்ப்புத் தெரிவிக்க முடியும்.. ? இது என் பெயரில் இருக்கும் கட்சி.. இனி அவரும் இதில் ஒரு பார்வையாளராகத்தான் இருக்க முடியும். அப்படியே இருக்கட்டும்..’ என்று எஸ்.ஏ.சி. தன்னுடைய ஆதரவாளர்களிடத்தில் பேசியிருக்கிறார்.

மேலும், இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, ‘கடந்த டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் தினத்தன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தேன் என்றும், அப்போது விஜய் தன்னை கட்டியணைத்து தனக்கு மோதிரம் ஒன்றை அணிவித்ததாகவும்..’ கூறியிருக்கிறார்.

இந்தச் செய்தி அவருடன் இணைந்துள்ள விஜய் மன்றத்தின் பழைய நிர்வாகிகளுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

ஆனால், இந்தத் தகவல்களையெல்லாம் அறிந்த நடிகர் விஜய் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

K.N. அப்துல் ரசாக் செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ்,