கூட்டமாக இறக்கும் காகங்கள்.

மத்தியப்பிரதேசம் இந்தூரில் மூன்று நாட்களுக்கு முன்பு சுமார் 50 காகங்கள் பறவைக் காய்ச்சல் வைரஸ் வந்து இறந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களை அடையாளம் காண அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

செவ்வாயன்று டேலி கல்லூரியின் வளாகத்தில் கிட்டத்தட்ட ஐம்பது காகங்கள் இறந்து கிடந்தன. சில சடலங்கள் போபாலுக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டன. அவை எச் 5 என் 8 வைரஸை கொண்டிருந்தது கண்டறியப்பட்டது” என்று இந்தூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பூர்ணிமா கடரியா தெரிவித்துள்ளார். கல்லூரி அமைந்துள்ள பட்டு ரெசிடென்சி பகுதியில் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் குளிர், இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாகவும் சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தூர் கால்நடை சேவையின் துணை இயக்குநர் பிரமோத் சர்மா கூறுகையில், வெள்ளிக்கிழமை மேலும் 20 காகங்கள் டேலி கல்லூரியின் வளாகத்தில் இறந்து கிடந்தன. இந்த சடலங்களின் சோதனை முடிவுகள் வரவிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் நடந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தூர் மாவட்டம் ஏற்கனவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பரணி செய்தியாளர், தமிழ் மலர் மின்னிதழ்.