புத்தாண்டு தினத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் 2016-ம்ஆண்டு ஜன.2-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்தனர். இதேபோன்ற ஒரு தாக்குதலை மீண்டும் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எல்லை பாதுகாப்பில் இருக்கும் ராணுவம், விமானப்படை தளங்கள், கப்பல் படை தளங்கள், மத்திய பாதுகாப்பு படையினர், போலீஸார் என பாதுகாப்புபணியில் இருக்கும் ராணுவத்தினர் மற்றும் அனைத்து பிரிவு போலீஸார் மீது தாக்குதல் நடத்ததீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகளின் சதித்திட்டம் குறித்து மத்திய பாதுகாப்பு துறைக்கு உளவுத்துறை தகவல்தெரிவித்துள்ளது. ‘ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பாஆகிய தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக பாகிஸ்தானில் இருந்து சில தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளனர்.
மத்திய உளவுத் துறையின்எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ராணுவமையங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ஓடிஏ, டிஆர்டிஓ வளாகங்கள், தாம்பரம் விமானப்படை தளம், இந்திய கப்பற்படைக்கு சொந்தமான அரக்கோணம் விமான தளம், தமிழக கடலோரத்தில் உள்ள இந்திய கப்பற்படை வளாகங்கள் மற்றும் கடலோர காவல் படை அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை விமானநிலையம் உட்பட மத்திய தொழிற்படையினரின் பாதுகாப்பில் இருக்கும் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.