இது உங்களுக்கான அழைப்பு.

உலகப் பாவை

                முன்னுரை

புதிய ‘பாவை’

திருப்பாவை, திருவெம்பாவை, தமிழ்ப்பாவை எனப் பெருகி வரும் பாவை இலக்கிய வகையில் இதுவும் ஒரு பாவை!

ஆனால்,
இது புதுப்பாவை
பொதுப் பாவை
ஒருமைப்பாட்டுப் பாவை இவ்வகையில் முதற் பாவை!

உலக ஒருமைப்பாடு, உலக அமைதி என்னும் ஆழ்மன வேட்கைகளைப் பாக்களாக்கி உங்கள் முன் படைக்கிறேன்.

படித்து மகிழுங்கள் என்பதற்காக அல்ல;
பாடி மகிழுங்கள் என்பதற்காக அல்ல;
புதுப்பாதை க்கு வாருங்கள் என உங்களை அழைப்பதற்காகவே.

இது உங்களுக்கு அழைப்பு.

-கு. மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்

( 1980-களில் நான் வழங்கிய உலகப்பாவை என்னும் 30
பாவைப் பாடல்களை
நாள் ஒன்றுக்கு ஒன்று
வீதம் வழங்க உள்ளேன். )

  1. ஒன்றே உலகம்

உலகமெலாம் ஒன்றே! வாழும் உயிர்களெலாம் ஒன்றே!என்ற நலங்கொழிக்கும் உண்மை நெஞ்ச
நாளமெலாம் பாய்ந்து ஓட,

பலசாதி மதங்கள் கொள்கை
பலஇனங்கள் கட்சி நாடு
உலகிலினி இல்லை என்னும் உறுதியொளி நெஞ்சில் பாய,

உலவுபண ஏற்றத் தாழ்வும் உலுக்குநிற வேறு பாடும்
புலர்நேரப் பனிபோல் மண்ணில்
புகலிடமே இன்றி மாய,

நிலையான கொள்கை தந்து நேர்கொண்ட பார்வை யோடு வலம்கண்டு வளமே சேர்க்க வலம்வருவாய் உலகப் பாவாய்!

( இந்தப் பாடல் தமிழக அரசின் 9 ஆம் வகுப்புப் பாட நூலில் இடம் பெற்று இருந்தது)