நாகூர் ஹனீஃபா 95 வது ஜனன தினம்.

இசை முரசு நாகூர் இஸ்மாயில் முகமது ஹனீஃபா அவர்களின் 95 வது ஜனன தினம் இன்று…(25.12.2020)….

இஸ்லாமிய பக்திப் பாடல்களை தன்
சிம்மக்குரலில் பாடுவதில்
திரு. நாகூர் ஹனீஃபா அவர்களுக்கு நிகர் அவரேதான். இஸ்லாமிய இசைத்துறையில் முடிசூடா சக்கரவர்த்தி ஹனீஃபா. தமிழிசையுலகில் கொடிகட்டிப் பறந்த எம்.கே.தியாகராஜபாகவதர்,
பி.யு.சின்னப்பா,
எஸ்.ஜி.கிட்டப்பா,டி.ஆர்.மகாலிங்கம்,
சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்,பாலமுரளி கிருஷ்ணா,டி.எம்.சௌந்தரராஜன் போன்ற சங்கீத ஜாம்பவான்கள் வரிசையில் நாகூர் இ.எம்.ஹனீஃபாவும் பிரதானமானவர் .இஸ்லாமிய பாடல்கள் பெரும் பாலும் இவர் பாடியதுதான் அதிகம் எனலாம். ஒலி பெருக்கி இல்லாமலே பாடும் வல்லமை கொண்டது இவரின் சாரீரம்.இறைவன் இவருக்கு அளித்த அருட்கொடையே இச்சாரீரம்.எந்த ஒரு கடினமான வசனங்கள் கொண்ட பாடலையும் தனது கணீர் குரலில் உச்சஸ்தாயியில் பாடக்கூடியவர். “தெய்வம்”திரைப்படத்தில் இடம்பெற்ற “மருத மலை மாமணியே முருகையா”பாடல் எவ்வாறு மதுரை சோமு அவர்களுக்கு மைல் கல்லாக அமைந்ததோ அதேபோல் இவருக்கு “அல்லாவை நாம் தொழுதால்”,இறைவனிடம் கையேந்துங்கள்”பாலைவனத்தில் ஒரு ரோஜா மலர்ந்தது,நானிலம் போற்றும்
நாகூரான் “போன்ற பாடல்கள் இவரை அடையாமிட்டு காட்டி பெருமை சேர்த்தவைகளாகும்.”பள்ளிகள் பல இருந்தும் பாங்கோசை கேட்ட பின்னும் பள்ளி செல்ல மனம் இல்லையோ படைத்தவன் நினைவில்லையோ”என இவரின் குரல் முழங்கும் போது பள்ளிக்குச் செல்லாதவரும் சென்று விடுவர்.”பாங்கோசை “என ஒலிக்கும் போது உண்மையில் பள்ளியில் ஒலிக்கும் புனித பாங்கு போலவே ஒலிரும் இவர் குரல்.மக்கள் திலகம் எம்ஜியாரின் “குலேபகாவலி”என்ற படத்தில் முதல் குரலாக இவரின் பாடல் “நாயகமே நபி நாயகமே”என ஒலிக்கும். பின் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் “பாவமன்னிப்பு”படத்தில் “எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரைச் சொல்லி “என்ற பாடலில் டி.எம்.சௌந்தரராஜனுடன் இணைந்து பாடி சிறப்பாக பேசப்பட்டார். இயக்குனர் கே.பாலச்சந்தரின் “அபூர்வ ராகங்கள்” படத்தில் இடம்பெற்ற “கைகொட்டி சிரிப்பார்கள் “என்ற பாடல் ஹனீஃபா பாடுவதாக இருந்தது,பின்னர் ஏதோ காரணத்தால் அப்பாடலை ஹனீஃபாவின் சாயலில் காயல் ஷேக் முகமது பாடினார். அதைப் பெருமையாக பாராட்டியவர் திரு. ஹனீஃபா அவர்கள். தென்னகப் பிரபலங்கள்,அரசியல் தலைவர்கள்,அனைவரினதும் அன்பையும்,பண்பையும் ஏகோபித்து பெற்றவர் ஹனீஃபா.தமிழ் உச்சரிப்பில் தெட்டத் தெளிவாக பாடுவதில் ஹனீஃபா வல்லவர். 1925.12.25 அன்று ராமநாதபுரம் வெளிப்பட்டணம் என்ற ஊரில் இஸ்மாயில் முகமது,மரியம் பீவி இணையருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார் ஹனீஃபா.தனது 30வது வயதில் ரோஷன் பேகம் என்பவரை மணந்து இரண்டு ஆண் மற்றும் நான்கு பெண் வாரிசுகளுக்கு தந்தையானார்.
தனது 11வது வயதில் நன்கு பாடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டார்.திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பாடி அனைவரையும்
ஈர்த்தவர் ஹனீஃபா. 15 வயதில் பக்கவாத்தியங்களுடன் தேரெழுந்தூரில்
தனது முதல் கச்சேரியை ஆரம்பித்தார்.
அந்தக் கச்சேரிக்கு அப்போது இவர் வாங்கிய தொகை 25/=.கடந்த 65 ஆண்டுகளில் சுமார் 5000 ற்கும் மேற்பட்ட கச்சேரிகளில் பாடி சாதனை புரிந்துள்ளார்.தந்தை பெரியார்,காயிதே மில்லத்,பேரறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி போன்றோரின் திராவிடக்
கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு,தன்னையும்
1930ஆம் ஆண்டு திராவிட கழகத்தில் இணைந்து கொண்டார். திமுக வின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர்களில் ஹனீஃபா முக்கியமானவர்.திமுக வின்
பிரச்சார பீரங்கியாக செயற்பட்ட பெருமை அக்காலத்தில் ஹனீஃபாவுக்கு உண்டு. கல்லக்குடி மறியல் போராட்டத்தில் கலைஞர் கருணாநிதியைப் பாராட்டி “கல்லக்குடி வென்ற கலைஞர் “என்ற பாடலையும்,
பேரறிஞர் அண்ணாவைப் புகழ்ந்து “அழைக்கின்றார் அண்ணா “என்ற பாடலையும் பாடி திமுக விற்கு வலு சேர்த்ததுடன் கழக பிரச்சார பாடகருமானார்.திரு. ஹனீஃபாவின் வசிப்பிடம் நாகூர் ஆதலால் அவரின்
நா கூர் என கலைஞர் கருணாநிதி அவரின் குரலுக்கு நற்சான்று வழங்கி “இசை முரசு”என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்தார். 1957 ஆம் ஆண்டு திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் நாகபட்டினம் தொகுதியில் போட்டியிட்டார்.திமுக மேடைகளில் இசை நிகழ்ச்சிகளை மட்டும் நடத்தாமல்,கழகம்
நடத்திய பல போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறைவாசமும் அனுபவித்தார் ஹனீஃபா அவர்கள். திரு. ஹனீஃபா அவர்கள் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும்,தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராகவும் மக்கள் பணியாற்றியுள்ளார்.இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜே.ஆர். ஜயவர்த்தன,பிரேமதாச போன்ற தலைவர்கள் முன்னிலையில் இசைக்கச்சேரி நடத்தி அவர்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் பெற்றவர் திரு. ஹனீஃபா அவர்கள். கம்பளை ஸாஹிராக்கல்லூரிக்கு ஒரு தடவை விஜயம் செய்து”முகமத் மண்டபத்தில்” கச்சேரி நிகழ்த்தியதை இப்பதிவில் நினைவூட்ட விரும்புகின்றேன்.2008 ஆம் ஆண்டு இறுதியில் நாகூரில் அன்னாரின் இல்லத்தில் அப்பெருந்தகையை நேரில் சந்தித்ததை
பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்.அன்று அவர் அன்புடன் அளித்த விருந்தோம்பலையும் நினைவில்
கொள்கின்றேன்.இலங்கை ரசிகர்களின்
ரசனையை பெரிதும் பாராட்டிப்பேசியது நன்றாக என் நினைவில் பதிந்துள்ளது.நடிப்புக்கு எவ்வாறு ஓர் நடிகர் திலகமோ அது போல் இஸ்லாமிய பாடல்களுக்கு ஓர்
நாகூர் இ.எம்.ஹனீஃபா என்றால் மிகையாகாது. 80 ஆண்டுகளில் அவர் பாடிய பாடல்கள் சுமார் 2500 ஐயும் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. “மௌத்தையே நீ மறந்து இங்கு வாழலாகுமா”என்ற அன்னாரின் மெய்யான வரிகளுக்கு ஹனீஃபாவும் விதிவிலக்கல்ல,என்ற இறைவன் நியதிப்படி “இறைவனிடம் கையேந்துங்கள் “என்றவரை 2015.ஏப்ரல் 08 இல் அவ்விறைவனே அவரை ஏந்திக்கொண்டான்.திரு.ஹனீஃபா அவர்கள் நம்மை விட்டு மறைந்தாலும் அவர் திருவாய் மலர்ந்த கீதங்கள் நம் நெஞ்சங்களில் என்றும் நீக்கமற நிலைத்து வாழும்…
அன்னாரின் 95 வது ஜனன தினத்தில் அவர் கலைக்கு ஆற்றிய மகத்தான பங்களிப்பினையும்,அன்னாரையும் போற்றுவோமாக…
ஆக்கம்:(எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை )