பிரிட்டன் விமானங்களுக்கு நேபாளம் தடை ?
புதிய வகை கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கு நேபாளமும் தடை விதித்துள்ளது.
வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய வகை மாறுபாடு மற்றும் வடிவத்தை கொண்ட கரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலையாகப் பரவி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.. இந்த புதிய வகை நோய்த்தொற்று பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, டென்மாா்க், நெதா்லாந்து ஆகிய நாடுகளில் பரவி வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து அனைத்து நாடுகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த புதிய பாதிப்பைத் தொடர்ந்து, பிரிட்டனுக்கான விமானச் சேவையை கனடா முழுமையாக ரத்து செய்தது.
அதுபோல, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, கனடா, துருக்கி,பெல்ஜியம், ஆஸ்திரியா, அயர்லாந்து, பல்கேரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளும் பிரிட்டனுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.
அந்த நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தி வருகிறது.
இதனிடையே இந்தியா-பிரிட்டன் இடையே அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக டிச. 22-ஆம் தேதி இரவு 11.59 முதல் டிச.31-ஆம் தேதி இரவு 11.59 வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.
மேலும் ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரிட்டனிலிருந்து வரும் அனைத்து விமானங்களின் (ஏற்கெனவே புறப்பட்ட விமானங்கள், 22-ஆம் தேதி இரவு 11:59 மணிக்குள் இந்தியாவுக்கு வரும் விமானங்கள்) பயணிகளையும் விமான நிலையங்களில் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் (கரோனா) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பரிசோதனையில் கொவைட் 19 நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு, அதற்கான மருத்துவச் செலவுகளை ஏற்க வேண்டும்’ என்று அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதிய வகை கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக, நேபாளம்-பிரிட்டன் இடையே அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக நேபாள விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ரத்து 23-ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
மேலும் இதுகுறித்து அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக நேபாள விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
K.N. அப்துல் ரசாக்
செய்தியாளர், தமிழ் மலர் மின்னிதழ்