4 வங்கிகளின் வாட்ஸ்அப்- பே வசதி!
பாரத ஸ்டேட் வங்கி, ஹெ.டி.எஃப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்காக ‘வாட்ஸ்ஆப் பே’ வசதி அளிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பிறகு, கடந்த நவம்பர் மாதம் இந்த ‘வாட்ஸ்ஆப் பே’ வசதிக்கு அனுமதி கொடுத்துள்ளது நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI).
யூனிஃபைடு பேமண்ட் இண்டர்ஃபேஸ் (UPI) மூலம் 160க்கும் மேற்பட்ட வங்கிகள் இவ்வசதியைத் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும்.
அதன்படி, மேற்கண்ட 4 வங்கிகளின் சுமார் 2 கோடி வாடிக்கையாளர்கள் இவ்வசதியை தற்போது பெறுகின்றனர்.
இதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என இந்த 4 வங்கிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
வாட்ஸ்ஆப்பில் 10 இந்திய மொழிகளில் இந்த பியர்-டூ-பியர் (P2P) பேமண்ட் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பேமண்ட்டுக்கும் தனித்தனி ‘பின்’ கொடுப்பது உள்ளிட்ட அனைத்துவிதமான பாதுகாப்பு வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது.
பேடிஎம், கூகுள் பே, போன்பே ஆகியவற்றுக்குப் போட்டியாக இந்த ‘வாட்ஸ்ஆப் பே’ வசதியை இந்தியாவுக்குள் புகுத்தியுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
டிஜிட்டல் பேமண்ட் வசதிகளைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 94 டிரில்லியன் டாலர்களை அது எட்டும் என்று தெரிகிறது.
K.N. ஆரிப்
செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ்