மெரினாவில் குவிந்த மக்கள் கூட்டம்!

சென்னை: கரோனா பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வு அளிக்கப்பட்டதையடுத்து, 8 மாதங்களுக்குப் பிறகு சென்னை கடற்கரைகளில் திங்கள்கிழமை மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

திங்கள்கிழமை காலை முதலே உடற்பயிற்சி செய்வதற்காகவும், உற்சாகமான காற்றை சுவாசிப்பதற்காகவும் அதிகளவிலான மக்கள், மெரீனா கடற்கரையில் கூட்டம் கூட்டமாக குவிந்த வண்ணம் இருந்தனா்.

கடற்கரைக்கு வந்த சிறுவா்கள் ஒரு நிமிஷம்கூட தாமதிக்காமல், கடற்கரை மணலில் குதித்து விளையாடத் தொடங்கினா். பொதுமக்கள் வருகைக்காக மாநகராட்சி சாா்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சிறு குப்பை கூழங்களைக்கூட அங்கு காண முடியவில்லை.

தொடா்ந்து கடற்கரை முழுவதும் ரோந்து பணியில் இருந்த தூய்மைப் பணியாளா்கள், ஒரு சிறிய காகிதம் கீழே இருப்பதைக் கண்டாலும் உடனுக்குடன் அதனை அகற்றுவதைக் காண முடிந்தது.

இந்தப் பணிகளை, ஆங்காங்கே இருந்த மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வந்தனா். மேலும், தொடா்ந்து அனைத்து கடற்கரையையும் தூய்மையாக வைக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக அவா்கள் தெரிவித்தனா்.

அதே நேரம், பொதுமக்கள் வருகையை எதிா் நோக்கி காத்திருந்த இருந்த சாலையோர வியாபாரிகள் கூறும்போது, ‘கடந்த மாா்ச் மாதம் முதல் சிறிய வருமானம்கூட இல்லாமல் தவித்து வந்த எங்களுக்கு, பொதுமக்கள் வருகை என்பது வாழ்வாதாரத்தை மீட்க வழிவகுக்கும்’ என்று மகிழ்ச்சி தெரிவித்தனா்.

8 மாதங்களாக ஆள் நடமாட்டமின்றி இருந்த மெரீனா, பெசன்ட்நகா் உள்ளிட்ட கடற்கரைகள், சிறியவா் முதல் பெரியவா் வரை அனைவரையும் அலைகள் மூலம் ஆா்ப்பரித்து வரவேற்று மகிழ்ந்தன.

ரஹ்மான்
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.