நான் திருக்குறளுக்காக வாழ்கிறேன்

அருளுடையீர் வணக்கம்

வள்ளுவமே உலகின் உயர்ந்த
வாழ்க்கை நெறி.

அதை வாழ்க்கை நெறியாக்கிக்
கொள்ள ஒவ்வொருவரும்
உறுதி ஏற்க வேண்டும்.

வாழ்க்கையின் ஒவ்வொரு
செயற்பாடும் வள்ளுவத்தை
மையமிட்டதாக அமைய
வேண்டும்.

அதற்கு இந்தத் திருக்குறள்
தொண்டன் மேற்கொண்டு
வரும் செயற்பாடுகள் சில:

குடும்ப அளவில் பிறப்பு
முதல் இறப்பு வரையிலான
எல்லா நிகழ்வுகளையும்
திருக்குறள் வழியில்தான்
நடத்தி வருகிறோம்.

உலகத் திருக்குறள் மையம்
என்னும் உலகின் முதல் திருக்குறள் பேரியக்கத்தின்வழி மேற்கொண்ட 100 செயற்பாடுகள் தனிப் பெரும்
20 தொகுதிகளாக வெளிவர உள்ளன. இதுவரை 3 தொகுதிகள் வெளிவந்துள்ளன.

அவை நீங்கலாகத் தனித்த நிலையில் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் வருமாறு :

  1. சென்னைப் பல்கலைக் கழகத் திருக்குறள் ஆய்வு
    மையத்தில் சேர்ந்து
    கிடைத்த ஊதியத்தில்
    திருவள்ளுவர் உருவம்
    பதித்த கணையாழி
    செய்து, கடந்த 45 ஆண்டு
    களுக்கு மேலாக வீட்டைவிட்டு வெளியே செல்லும்
    போதெல்லாம் அதை விடாது அணிந்து வருகிறேன்.
  2. வங்கியில் கணக்குத் தொடங்கும் போது, முன் வைப்பாக ரூபாய் 1330 வைத்தே தொடங்கி வருகிறேன்.
  3. கையொப்பம் இடும்போது, கடந்த 45 ஆண்டுகளாகத் தமிழில் கையொப்பமிட்டு, கையொப்பத்தின் கீழ் நாள் குறிப்பதற்குப் பதிலாக, அறம் பொருள் காமம் என்பதைக் குறிக்கும் வகையில் மூன்று புள்ளிகள் வைத்து வருகிறேன்.
  4. திருவள்ளுவருக்குக் கோயில் அமைத்து, வழிபாடுகள் நடத்தி வருகிறேன்.
  5. திருவள்ளுவர் கோயிலில் திருக்குறளுக்காக வாழ்ந்து மறைந்த 40 திருக்குறள் சான்றோர்களின் தனித்தனிப் படங்களை வைத்து வழிபட்டு
    வருகிறேன்.

( இந்த இரண்டு பணிகளும் என் துணைவியார் மறைந்த
பின்னர் பெருங்குடியில்
வாடகை வீட்டில் இருப்பதால் திருவள்ளுவர் வழிபாட்டு அளவில் நடைபெற்று வருகின்றன.)

  1. கடந்த 3 ஆண்டுகளாகத் திருவள்ளுவர் வழிபாட்டோடு , திருக்குறளை வாழ்வியலாக்கிய
    என் துணைவியார் படத்தையும்
    வைத்து, நாள்தோறும் காலையும் மாலையும் வழிபட்டு வருகிறேன்.
  2. வீட்டை விட்டு வெளியே வரும்
    போதெல்லாம் சட்டைப் பையில்
    அறம் பொருள் காமம்
    என்பதைக் குறிக்கும்
    வகையில் மூன்று வண்ண எழுதுகோல்களை வைத்தபடியே வெளியே வருகிறேன்.
  3. திருக்குறள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்றால் திருவள்ளுவருக்கு என்று வரையறுத்த சீரடையில்தான்
    பங்கேற்று வருகிறேன்
  4. திருக்குறள் ஆய்வுப் பணிகளுக்கு என்றே ஒவ்வொரு நாளும் குறைந்தது சராசரியாக 18 மணி நேரம் செலவிட்டு வருகிறேன்.

மூச்சும் பேச்சும், ஆய்வும் வாழ்வும் திருக்குறள் என்றே
முழுமையாக வாழ்ந்து வருகிறேன்.

73 அகவை நிறைவு பெற்றுள்ள
என் வாழ்க்கையில்
திருக்குறள் பரப்பியலாக்கப் பணிகள் 63 ஆண்டுகள்
திருக்குறள் ஆய்வியலாக்கப் பணிகள் 47 ஆண்டுகள்
திருக்குறள் வாழ்வியலாக்கப்
பணிகள் 30 ஆண்டுகள்
முடித்துள்ளேன்..

இன்னும் தொடர்கிறேன்.

நான் திருக்குறளுக்காக
வாழ்கிறேன் என்ற மன நிறைவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

திருக்குறள்வழி வாழுங்கள்
என்று பேசுங்கள், தப்பில்லை.
ஆனால், சொன்னபடி வாழ்ந்து
காட்டுங்கள்; அதுதான் உண்மையான வாழ்க்கை.

நன்றி

  • கு. மோகனராசு
    நிறுவனர்
    உலகத் திருக்குறள் மையம்