சுக்கிரன் யோகத்தை அடைவது எப்படி?

சுக்கிரன் யோகத்தைக் கொடுப்பார் என்றே எல்லாரும் நம்புவார்கள். ஆனால் அவர் அமரும் இடத்தைப் பொறுத்தே நன்மைகள் ஏற்படும். கன்னி வீட்டில் சுக்கிரன் நீசம் பெறுவார். எனவே, கன்னி வீட்டில் சக்கிரன் அமையப்பெற்ற ஜாதகர்கள், சுக்கிர திசையில் யோகத்தை அடையமாட்டார்கள், அதேபோல சுக்கிரன் 8ல் அமையப்பெற்ற ஜாதகர்கள் சுக்கிர திசையில் நல்ல பலன்கைளைப் பெறமுடியாது. சுக்கிரன் லக்னத்துக்கு எந்த இடத்துக்குரியவராக வருகிறார் என்பதை கவனிக்க வேண்டும். அதற்குரிய பலனை 8ல் வருகின்ற சுக்கிரன் வழங்குவார்.

எடுத்துக்காட்டாக ஒருவருக்கு லக்னம் சிம்மம் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு சுக்கிரன் 1க்குரியவரும் 10க்குரியவருமாக வருவார். 3,10க்குரிய சுக்கிரன் 8ல் மீன வீட்டில் உச்சமாக அமர்ந்தாலும் நன்மைகள் வராது. 3ஆமிடத்து சுக்கிரன் 8ல் வருவதால் வீடு, மனை விருத்திகளில் ஜாதகர் சிறப்பு அடைய மாட்டார். 10க்குரியவரும் 8ல் வருவதால் பலவித தொழில்களைச் செய்ய முற்பட்டு கையிலிருக்கும் காசும் போய் சஞ்சலத்தோடு காலம் கழிப்பார். எனவே, 8ல் சுக்கிரன் வரும்போது மிகவும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். சுக்கிர திசை முடியும் வரை அமைதி காத்துச் செல்லவேண்டும்.

அதே நேரத்தில் துலாமில் சுக்கிரன் அமையப்பெற்ற ஜாதகர்கள் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவார்கள். உறவினர்கள், நண்பர்களிடம் பாசத்தோடு பழகுவார்கள், பெண்களால் பல நன்மைகளைபும் அடைவார்கள், செல்வந்தராக வாழ்வார்கள். அரசாங்க உயர்பதிவியில் அமர்வார்கள். அந்தஸ்தானவரின் நட்பினால் தங்களுக்கு பல வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்வார்கள்.

ஒருவரது ஜாதகத்தில் லக்னம் துலாமாக அமையவேண்டும். அந்த லக்னத்தில் சுக்கிரன் ஆட்சியாக அமரவேண்டும். லக்னத்துக்கு ஒன்பதில் அதாவது மிதுன வீட்டில் புதன் ஆட்சியாக அமைய வேண்டும். மகரத்தில் சனி பகவான் ஆட்சிபெற்று அமையவேண்டும். கடகத்தில் குரு பகவான் உச்சமாக அமையவேண்டும். இதுபோன்ற ஜாதகம் அமையப்பெற்றவர்கள் மிகப்பெரிய யோகத்தை அடைவார்கள். வணிகத்திலும் சிறந்து விளங்கலாம். அரசியலிலும் சிறந்து விளங்கலாம். ஒருசிலர் உயர் அதிகாரியாகவும் விளங்குவார்கள்.

பரிகாரம் – 1
இதுபோன்ற ஜாதகம் அமையப்பெற்றவர்கள் மாதந்தோறும் வரும் வளர்பிறை ஏகாதசி திதியில் கிருஷ்ணன் அல்லது பெருமாள் ஆலயத்தில் அவல் பாயசம் வைத்து வணங்கி, அதனை பக்தர்களுக்கு கொடுத்துவந்தால் எதிர்காலத்தில் பிள்ளைகள் மிகப்பெரிய யோகத்தை திறமைக்கேற்ப அடைவார்கள்.

பரிகாரம் – 2
மாதந்தோறும் ஆலயம் சென்று வணங்கிட முடியாதவர்கள் 27 வெள்ளை மொச்சைப் பயறு எடுத்து அதனை வெள்ளைத் துணியில் முடிந்து, உங்கள் வீட்டுப் பூஜையறை அல்லது சாமி படத்துக்குக் கீழ் வைக்கவேண்டும். தினசரி அதனை உள்ளங்கையில் வைத்து வணங்கி வந்தால், எதிர்காலத்தில் மிகப்பெரிய யோகத்தை அடையலாம்.

செவ்வாய் தோஷம் உள்ள பெண்களும், கன்னி ராசியில் செவ்வாய் உள்ள ஜாதகத்தைக் கொண்டவர்களும் குங்குமத்தில் பிள்ளையார் பிடித்து வணங்கி வர செவ்வாய் தோஷம், கன்னிச் செவ்வாய் தோஷம் விலகும். (கன்னி ராசியில் செவ்வாய் வந்தால் கடலும் வற்றிப் போகும் என்பது ஜோதிடச் சொல்)

வீட்டிலேயே மஞ்சளில் பிள்ளையார் செய்து, அதற்கு குங்குமம், அறுகம்புல் இட்டு வழிபட்டு வந்தால் அனைத்து பலன்களையும் அடையலாம். முப்பது நாட்களுக்குப் பிறகு அதனை தண்ணீரில் (கிணறு, கடல் தவிர) போட வேண்டும். பலன் கிடைக்கும்.
- க.வைரமணி