பாகிஸ்தான்: தீபாவளி!

பாகிஸ்தானில் தீபாவளியா தலைப்பைப் படித்தவுடன் உங்களைப் போலவே நாங்களும் இப்படித்தான் சந்தோஷமும், ஒருவித இன்ப அதிர்ச்சியும் கலந்த குரலில் துள்ளிக் குதித்தோம்.

உண்மைதான்….. முழுக்க முழுக்க இஸ்லாமிய தேசமாக அறியப்பட்ட பாகிஸ்தானில் ஆண்டுதோறும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஏதோ ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஓரிரு இந்துக்களால் மட்டுமே கொண்டாடப்படுவதாக யாரும் நினைத்து விட வேண்டாம். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் வர்த்தகத் தலைநகர் கராச்சி மற்றும் ராவல்பிண்டி போன்ற நகரங்களில் ஆண்டுதோறும் தீபாவளி கொண்டாடப்படுகிறது.

பாகிஸ்தான் முழுக்க முழுக்க இஸ்லாமியர்கள் வாழும் தேசமாக இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்துக் குடும்பங்கள் வசிக்கவே செய்கின்றன. பிரிவினைக்குப் பிறகும் சொந்த மண்ணை விட்டு இந்தியாவுக்கு குடிபெயர்ந்து செல்ல மனமின்றி பாகிஸ்தானிலேயே மைனாரிட்டிகளாக தங்கி விட்டவர்கள் இவர்கள். சமீப ஆண்டுகள் வரை தங்கள் பண்டிகை தினங்களை வீட்டுக்குள்ளேயே கொண்டாடி வந்த இந்துக்கள், கடந்த சில ஆண்டுகளாக குழுக்களாக இணைந்து கொண்டாடி வருகிறார்கள்.

குறிப்பாக கடந்த ஆண்டு இஸ்லாமாபாத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளி திருவிழா அந்நகரில் வாழும் இந்துக்களை எல்லாம் ஒருங்கிணைப்பதாக அமைந்தது. பாகிஸ்தான் இந்துக்களைப் பொறுத்த வரை இந்த நிகழ்ச்சி ஒரு மிகப் பெரிய மாறுதலாக கருதப்பட்டது.

இஸ்லாமாபாத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய அரங்கம் ஒன்றில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நகரமம் முழுவதிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் அரங்கில் குழுமி விட்டன. கூடவே தங்களது பக்கத்து வீடுகளில் வசிக்கும் முஸ்லீம் குடும்பங்களையும் அழைத்து வந்திருந்தது கூடுதல் விசேஷம்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் முஷாகித் உசேன் சையத், நாட்டின் மதங்கள் மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் இஜாஸ் உல்ஹக், செய்தித்துறை இணையமைச்சர் தாரிக் அசிம்., சிறுபான்மையினர் துறை அமைச்சர் முஸ்டாக் விக்டர் மற்றும் எம்.பி.க்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முஸ்லீக் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் உசேன் சையத் பேசும்போது,

“பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் அனைவரும் தங்கள் மதங்கள் தொடர்பான பண்டிகைகள் மற்றும் நிகழ்ச்சிகளை மிகவும் சுதந்திரத்தோடு கொண்டாடலாம். அதற்கு நாட்டில் எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. இந்த நாட்டில் முஸ்லீம்களுக்கு என்னென்ன மத உரிமைகள் உண்டோ அவை இந்துக்களும் உண்டு. சொல்லப் போனால் பாகிஸ்தானில் இன்றைய பொருளாதார வளர்ச்சியில் இந்துக்களின் பங்கு மிகப்பெரியது. அவர்களுக்கு உரிய உரிமைகளை எப்போதும் தர இந்த அரசு தயாராக உள்ளது…” என்றார்.

இந்த ஆண்டும் இதே போன்றதொரு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பாக, பாகிஸ்தானில் கொண்டாடப்படும் தீபாவளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்த ஆண்டு, அதிபர் பர்வேஷ் முஷாரப் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு  இந்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முஷாரப் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் பண்டிகை மட்டுமல்ல. மகாவீர் ஜெயந்தி, குருநானக் பிறந்த தினம் மற்றும் மகா சங்கராந்தி போன்ற பண்டிகைகளையும் சிறப்பாக கொண்டாட அரசே ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

க. வைரமணி