சிங்கப்பூர் – தீபாவளி

சிங்கப்பூர் – தீபாவளி

வாங்க… இந்த முறை உங்களை ஒரு கனவு உலகுக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கே பெரிய பெரிய கட்டிடங்கள், சுத்தமான அகலமான சாலை, செடி கொடிகள் என பல சிறப்புகள் உண்டு. இவற்றை பலமறை படித்திருப்பீர்கள்.. ஏன் பார்த்தும்கூட இருப்பீர்கள். ஆனால் உங்களின் திருநாளின் போது சிங்கப்பூருக்குப் போயிருக்கிறீர்களா?.

     தீபாவளி பண்டிகைக்கு சொந்தம் கொண்டாடும் இந்தியாவில் கூட அப்படியொரு கோலாகலத்தைப் பார்த்திருக்க மாட்டீர்கள். “ஜாய்ஃபுல் சிங்கப்பூர்….” என்ற வரிகளின் முழு அர்த்தத்தை சிங்கப்பூர் திருவிழாக்களில் உணரலாம்.

‘சிங்ஹப்பூர்’ என்ற பெயர்தான் நாளடைவில் மருவி சிங்கப்பூரானது என்பார்கள். இந்த நாட்டின் வரலாற்றை உணர்ந்தவர்கள்.

பல பேருக்கு தெரியாத உண்மை ஒன்றை இங்கே சொல்லியாக வேண்டும். சிங்கப்பூர் ஒரு அந்நிய நாடு அல்ல. ஒரு இந்திய ராஜாவால் உருவாக்கப்பட்ட நகரம். இந்திய ராஜாவால் அமைக்கப்பட்ட இந்த நகரம். பிறகு ஒரு தனி நாடாகவே மாறி விட்டது.

ஒரு திறந்தவெளி பஸ்ஸில் ஏறி பயணிப்பது சிங்கப்பூரை முழுமையாய் சுற்றிப் பார்த்த அனுபவத்தை உங்களுக்குத் தரும். லோகல் டிரெய்ன் மற்றும் தொலைநோக்கு கண்ணாடி பொருத்தப்பட்ட கேபிள் காரில் பயணம் செய்வதும் சுகம்தான். பம் போட் அல்லது சீன ரிக் ஷாவில் உட்கார்ந்தபடி ‘சைனா டவுன்’ சுற்றிப் பார்க்கலாம்.

பெரிய பெரிய ஷாப்பிங் மால்ஸ்? வானத்தை முத்தமிடும் கட்டடங்கள், அற்புதமான நீர் லேசர் ஷோ மற்றும் 24 மணி நேரமும் திறந்தே கிடக்கும் முஸ்தபா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என்றழைக்கப்படும் ‘முஸ்தபா’ வை பார்க்காமல் சிங்கப்பூர் சுற்றுலா முழுமை பெறாது. அது பல மாடி கொண்ட ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர், வொய்ட் டைகர் ஷா, அங்கே விலங்குகளின் பலவிதமான விந்தைகளைக் காணலாம். ஜுராங் பர்ட் பார்க், நைட் சஃபாரி, அன்டர் வாட்டர் வேர்ல்டு, சயின்ஸ் சிட்டி, மியூசியம் ஆகியவற்றைப் பார்த்து மகிழலாம்.

எல்லாம் சிஸ்டமேட்டிக்

சிங்கப்பூருக்கு நாங்கள் சென்றது ஒரு மழைக்காலத்தில். ஏற்கெனவே கழுவித் துடைத்து விட்டது போன்ற சுத்தத்துடன் திகழும் சிங்கப்பூர், அந்த மழை நாளில் இன்னும் அழகுடன் ஜொலித்தது.

அந்த மழையிலும் சிங்கப்பூர் ஊழியர் ஒருவர் தடிமனான பைப் கொண்டவந்து செடி கொடிகள் மற்றும் கூரைகளைக் கழுவி கொண்டிருந்தார். ‘மழை பெய்கிறதுதானே, அப்படியே விட்டால் சுத்தமாகி விடுமே…’ என்று யாரும் சோம்பேறித் தனமாக இருந்து விடுவதில்லை அங்கே.

காரணம் அங்கே ராணுவ ஆட்சி நடக்கிறது. ஒவ்வொரு இளைஞனும் தனது வாழ்க்கையில் 2 வருடம் கண்டிப்பாக இராணுவ பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். எப்படி இருந்தாலும், இந்த நகரம் சுத்தமாக தூய்மையாக இருக்கிறது.

மொத்தமே 40 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அடங்கி விடுகிறது சிங்கப்பூர். இதை ஒரு நாடு என்று சொல்வதே சற்று பொருத்தமற்றதாக தெரியும். இந்த மக்களுக்கு கிராமங்கள் என்றால் என்னவென்றே தெரியாது.

இங்குள்ள சாலைகள், கட்டடங்கள், மரம் செடிகள், வாழைத் தண்டு போன்ற கால்களில் பென்சில் ஹீல் அணிந்து டொக்டொக் என்று நடந்து செல்லும் பெண்கள், இவையனைத்தும் தங்கம், வெள்ளி போன்று பளபளக்கும் உலோகங்கள் போலவே தோன்றுகிறது. இயற்கைத்தனம் குறைவு, செயற்கைதனம் அதிகம்…. ஒருபக்கம் இந்த ஊரைப் பார்க்கும்போது மனித இனத்தின் வளர்ச்சி குறித்து பெருமிதப்பட்டாலும், இயற்கை அழகை மொத்தமாகவே இந்த நாடு இழந்து விட்டதோ என்ற எண்ணம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

காலையில் பறவைகளின் கீச்கீச் சத்தம், மரக்கிளைகளில் ஒடி விளையாடும் அணில்கள், மாலையில் சூரியன் மறையும்போது ஒரு ராணுவ ஒழுங்குடன் திரும்பி வரும் பறவை கூட்டம்… இவையெல்லாம் சிங்கப்பூர் வாசிகளுக்கு வெறும் திரைப்படக் காட்சிகளாக இருக்க முடியும்.

இங்கே தினமும் மழை பெய்கிறத. அதுதாம்ன அந்த மக்களுக்கு காண கொடுத்து வைத்திருக்கும் இயற்கை அழகு.

அடடே…

வேலைக்காரி

சிங்கப்பூரில் ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அந்த வீட்டில் ரேச்சல் என்று ஒரு வேலைக்காரப் பெண். மெஷின் போன்று ஜன்னல் கதவுகளை மூடிக் கொண்டிருந்தாள். விலையுயர்ந்த பேண்ட், டாப்ஸ் அணிந்திருந்தாள். சத்தியமாக அவளை ஒரு வேலைக்காரி என்ற சொல்லவே முடியாது. அவளது நீள முடி இடுப்பு வரை தொங்கியது. அவள் ரொம்ப ஸ்மார்ட்டாகவும், மாடர்னாகவும் இருந்தாள்.

பின்புற கழுத்தில் டாட்டூ வரையப்பட்டிருந்தது. எல்லாமே திகைப்பாக இருந்தது. வீட்டு வேலைக்காரி இவ்வளவு ஸ்மார்ட்டாகவா? நம்ம சென்னையில் பெரிய கல்லூரியில் படிக்கும் பணக்கார வீட்டுப் பெண்கூட இப்படி இருக்க மாட்டாளே… அதுவும் நுனிநாக்க ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குகிறாள். இடுப்பு பெல்ட்டில் செல்போன், ஆங்கில நாவல் படிக்கிறாள். வேலை செய்யும் போது, ஆங்கில பாடல் அடங்கிய சி.டி. யை கேட்டபடி பாட்டை மணுமுணுத்துக் கொண்டே வேலை செய்கிறாள்.

நமது ஆச்சரியத்தைக் கவனித்த நண்பர் இப்படிச் சொன்னார்.

“வாரம் ஒரு முறை ஒவ்வொரு ‘கொண்டோ’ விலும் (அடுக்குமாடியை அங்கே இப்படி அழைப்பார்கள்) கொசு மற்றும் பூச்சிகளைக் கொல்ல மருந்து தெளிப்பார்கள். மரங்களின் கிளைகளை வெட்டுவார்கள். கொசு இருக்கும் இடம் தெரிந்தால் போதும். இங்குள்ள ஊழியர்கள் சி.பி.ஐ, மாதிரி ஈ கொசுக்களை தேடி ஓடுவார்கள். அப்போதுதான், ‘டெங்கூ’, ‘பேர்ட் ஃப்ளூ’ போன்று நோய்களைப் பரப்பும் கிருமிகளிடமிருந்து விடுபட முடியும். சிங்கப்பூரில் காகம் கூட எண்ணிக்கையில் ஒன்றிரண்டு அதிகமாக இருந்தால் அதைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவார்கள்…..”

ஒரு கணம் அதிர்ந்து நின்று விட்டோம் இதைக் கேட்டு.

ஒரு முழுமையான நாடு

பெரும்பாலான சீன வீடுகளின் வெளியே சிறு சிறு அழகான ஆரஞ்சு பழம் தொங்கும் மரம் வளரும் தொட்டி இருந்தது. அதன் மேல் சிவப்பு ரிப்பனில் ‘போ’வும் கட்டியிருந்தது. எல்லா வீடுகளிலும் ஏதாவது ஒன்று சிவப்பு நிறத்தில் இருந்தது எதுவுமில்லை யெனில் லாந்தர் விளக்கு அல்லது டெகரேஷன் பொருள் ஒன்று வீட்டுக்கு வெளியே அவசியம் தென்பட்டுக் கொண்டிருக்கும். அதுவும் சிவப்புதான்.

குட்மானிங் சிங்கப்பூர்

அன்று சிங்கப்பூர் சுற்றுலாவின் முக்கியமான இரவு. அன்றுதான் வாணவேடிக்கையுடன் தீபாவளி கொண்டாட்டங்கள். இங்கே வாரம் முழுவதும் அமைதியான நிம்மதியான தூக்கம்தான். அதோடு இங்கே கல்யாண மேள சத்தம், ‘வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்’ என்று ரெக்கார்டு டான்ஸ் எதுவும் கிடையாது.

பொதுக் கூட்டம் என்ற பெயரில் காதைக் கிழிக்கும் லௌட் ஸ்பீக்கர் கலாச்சாரத்திற்கும் தடா. சாமி பாட்டு கிடையாது. நாய் குரைக்கும் சத்தம் கிடையாது. ரெயில் ஓடும் சத்தம் என்று எதுவும் கிடையாது. வாண வேடிக்கை நடத்த தனியாக ஒரு இடம் வைத்திருக்கிறார்கள். ஆங்கில, சீன புத்தாண்டுகள், தீபாவளி போன்ற விசேஷங்களின்போது மட்டும் வாணவேடிக்கை அனுமதிக்கப்படுகிறது. அதுவும் அதிர்வேட்டுகள் இல்லாமல்,

சென்டோசா கடற்கரையில் நடக்கும் லேசர் ஒளி காட்சி கண்களுக்கு விருந்து. வாணவேடிக்கை இசை நடனம் எனும் வித்தியாசமான நிகழ்ச்சியும் இங்கு நடத்தப்படுகிறது.

தீபாவளியை வித்தியாசமாக கொண்டாட நினைப்பவர்கள் ஒரு முறை சிங்கப்பூருக்கு விசிட் அடிக்கலாம்!!!

க.வைரமணி